Thursday, March 8, 2018

ஒரு பெண்ணின் வாழ்க்கை-கவிதை

நான் பிறக்கும் போதே
துளிர்விட ஆரம்பித்தது
என் மீதான பாகுபாடும்

கொஞ்சம் வளர்ந்து
கல்வி வேண்டுமென்றேன்.
கல்வியின் கடவுளாக
நான் இருந்தும்-ஏனோ
கல்வி மட்டும் எனக்கு
கிடைப்பதில்லை.

செல்வத்தின் தலைவியாக
 நான் இருந்தும்-ஏனோ
சொத்தில் பங்கு எனக்கு
இன்றுமில்லை.

பிறர் நிழலில் வாழ
வேண்டாமென்று சுயமாய்
வாழ முடிவெடுத்தேன்,
வேலை ஒன்றையும்
தேர்ந்தெடுத்தேன்.

சாலையில் நடந்து
செல்கையில்-விசிலடித்து
நிறுத்தப் பார்த்தனர் சிலர்.
நான் ஒன்றும்
பேருந்தில்லையே-தொடர்ந்து
நடந்தேன்.

மாலை வீடு
திரும்புகையில்,பேருந்தின்
இறுக்கமான நெரிசலிலும்,சிலரின்
இரக்கமற்ற உரசல்கள்.
விலகி நிற்கச் சொன்னாலும்
கூட்டமில்லா பேருந்தில்
வரலாமே என்ற
கனிவான பதில்கள்.

அடுத்தநாள் காத்திருந்தேன்,
கூட்டமில்லா பேருந்திற்கு.
அப்போதும் கூறினர்
இந்த இரவு நேரத்தில்
இவளுக்கென்ன வேலையென்று.

தோழனென்று எண்ணி
தோள் சாய நினைத்தால்
அவனும் பழிக்கிறான்
பிறரிடத்தில் என்னை.

பிடித்தவன் பற்றி
வீட்டில் சொல்லவும் முடியாது,
பிடிக்காதவனிடம் என்
விருப்பம் சொல்லவும் முடியாது,
காரணம்
இரண்டிற்கும் பரிசு
என் மீதான
வன்முறையே.

சரி,வீட்டில்
பார்த்தவனுக்கே
மாலையிடலாம் என்றால்,
வரனாக செல்லும்
எனக்கு
தட்சணையும் வேண்டுமாம்.

என் குடும்பம் விடுத்து,
உன் குடும்பம் சுமக்கவும்
உனக்கு
கூலி தருகின்றேன்
நான்.

ஈறைந்து மாதங்கள்
கருவினில்
நான் சுமக்க,
ஆண் குழந்தை
வேண்டுமென்று வீட்டாரும்
நினைத்திருக்க,
உயிர் வலி
தாங்கி ,அரை
உறக்கத்தில் விழித்திருந்தேன்.

மெல்லிய விரல்கள்
என் கரம் பற்றின.
என்ன குழந்தையோயென்று
ஆவலோடு பார்த்தேன்.

ஆம்,
என்னிலிருந்து
பிறந்தேன்
மீண்டும் நானே.

என்
உள்ளமும்,உதடுகளும்
உவகையில் பூக்க,
வாரி அணைத்துக் கொண்டு
சொன்னேன்.

என் அன்பு மகளே,
எனக்கு கிடைக்காத
யாவும்,இனி
உனக்கு கிடைக்குமென்று......

---------மாற்றம் செய்வோம் சு.பிரபாகரன்


No comments:

Post a Comment